×

சட்டப்பேரவையில் ரூபி மனோகரன் எம்எல்ஏ வலியுறுத்தல்பனை கள் மீதான தடையை நீக்கி அரசு நேரடி விற்பனை

நெல்லை, ஏப். 11: பனையில் இருந்து கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக ரத்து செய்து, அரசு பனங் கள்ளை விற்பனை செய்ய முன்வர வேண்டும் என்று ரூபி மனோகரன் எம்எல்ஏ சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின்போது, தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ேபசியதாவது: தமிழ்நாட்டின் மரமாக இருக்கும் பனை மரம், கருப்பட்டி, பதநீர் என்று நிறைய பயன்களை நமக்குத் தருகிறது. நம் சித்த மருத்துவத்தில் கருப்பட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. இந்தப் பனை மரத்தில் இருந்து பெறப்படும் பதநீரில் சுண்ணாம்பு சேர்க்கவில்லை என்றால், அது பனங் கள் ஆக மாறுகிறது. ஆதி காலத்தில், மனிதர்களுக்கு ஆரோக்கியம் தரும் உற்சாக பானமாக இருந்த பனங் கள் இருந்திருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் பனங் கள் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. பனங் கள் 100 சதவீதம் இயற்கையானது. இந்த பனங் கள்ளை அப்படியே பருகினால், மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இப்போதுள்ள மது வகைகள் தரும் நீண்ட நேர போதையை பனங் கள் தராது என்கின்றனர். பனங் கள் மனதுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி மட்டுமே தரும் என்று, அதைப் பருகியவர்கள் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். அத்தகையை பனங் கள்ளை தமிழ்நாட்டில், பனை விவசாயிகள் தங்களது பனை மரங்களில் இருந்து இறக்க அனுமதிக்க வேண்டும். பனங் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை முற்றிலுமாக நீக்க வேண்டும்.தமிழ்நாட்டில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்தான் அதிக பனை மரங்கள் இருக்கின்றன.

பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குவோரின் எண்ணிக்கை இப்போது மிகவும் குறைந்துவிட்டது. முன்பெல்லாம் பதநீர் இறக்கி, கருப்பட்டி தயாரிக்கும் தொழில் தென் மாவட்டங்களில் மும்முரமாக நடைபெறும். இப்போது அந்தத் தொழில் எங்கே நடைபெறுகிறது என்று தேட வேண்டி இருக்கிறது. தற்போது பனை மரங்களை வெட்ட தடை இருப்பது பாராட்டக்கூடிய விஷயம். பனை மரங்களை பாதுகாக்கும் அரசின் இந்த அக்கறைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், பனங் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனே அரசு வெளியிட வேண்டும்.

பனங் கள் மீதான தடை நீக்கப்பட்டால், பனை விவசாயம் இன்னும் செழிப்பாக நடைபெறும். 10 பனை மரம் வைத்திருந்தால் கூட அவர்கள் சமூகத்தில் நல்ல பொருளாதார அந்தஸ்தோடு வாழ முடியும். அரசு விரும்பினால், பனங் கள் இறக்கும் விவசாயிகளிடம் இருந்து, கொள்முதல் செய்து, டாஸ்மாக் மதுக்கடைகளில், இயற்கை உற்சாக பானம் என்ற பெயரில், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் பனை விவசாயிகளும் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். அரசுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும். சபாநாயகரும், பனை மரங்கள் நிறைந்துள்ள எங்களது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான். மக்களுக்காக சிந்தித்து நல்ல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் முதல்வர், பனங் கள் மீதான தடையை உடனடியாக நீக்கி ஆணை வெளியிட வேண்டுகிறேன். இவ்வாறு ரூபி மனோகரன் எம்எல்ஏ பேசினார்.

The post சட்டப்பேரவையில் ரூபி மனோகரன் எம்எல்ஏ வலியுறுத்தல்
பனை கள் மீதான தடையை நீக்கி அரசு நேரடி விற்பனை
appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Ruby Manokaran ,MLA ,Nellie ,
× RELATED கே.பி.கே.ஜெயக்குமாரும், நானும்...